கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் திருப்பூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இப்பேருந்து இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சின்னாறு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மேற்கூரையில் இருந்து புகை வந்துள்ளது. இதைபார்த்த சாலையில் சென்ற வாகன ஒட்டிகள், பேருந்து ஓட்டுநருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அவர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக பயணிகளைக் கீழே இறக்கிவிட்டார். பின் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.
இதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து அனைவரும் மாற்று பேருந்து மூலம் பத்திரமாக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.