கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி கிராமத்தில், கடந்த 24ஆம் தேதி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆந்திர மாநில எல்லைக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு மது கொடுத்து சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரை தொடர்ந்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், ஜோடுகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜா, திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சங்கரி தலைமையிலான குழுவினர் இன்று பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்கரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குறிய, கண்டிக்கத்தக்க ஒரு செயல் என்றார்.
மேலும் அவர், சக நண்பரை நம்பிச் சென்ற சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கை கால்களை கட்டிப் போட்டு கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி மிக மோசமான நிலையில் உள்ளார். அந்த சிறுமிக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடு போதுமானதாக இல்லை, முறையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை. மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்முறை செய்வததற்கான பிரிவுகளிலும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதேபோல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கப்பெறுவதில்லை. இதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி உரிய நிவாரணம் உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.