கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலமங்கலம் பேரூராட்சியில் வாட்டர் மேனாக வேலை செய்து வருபவர், குப்புசாமி. இவர் 13ஆவது வார்டிற்குட்பட்ட ஆஞ்சநேயர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதை சரிசெய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 13ஆவது வார்டு பாமக கவுன்சிலர் ஸ்டெப்பி என்கிற வெங்கடாசலம், பணியை சரியாக செய்யாததாகக் கூறி குப்புசாமியை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து குப்புசாமி, கெலமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலருக்குத் தெரிவித்தபோது, திங்களன்று பேசுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பாமக கவுன்சிலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று கவுன்சிலரைக் கண்டித்து பேரூராட்சியில் உள்ள 53 தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பாமக கவுன்சிலரை நேரில் அழைத்து பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போது, திடீரென இரண்டு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், பின்னர் இருதரப்பினரும் சமாதானத்துடன் முடித்துக்கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: பெண்ணை கடத்திய பாஜக பிரமுகர் - இஸ்லாமிய கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு