’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயக்கனபள்ளியில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் இல்லை. ஆனால், அமைச்சர் என்ற போர்வையில் கே.பி.முனுசாமி இருக்கிறார். அமைச்சராக இருந்தபோதே ஜெயலலிதா அவரது பதவியைப் பறித்தார். அதிமுக பொதுக்குழுவில் அவரை 30% முனுசாமி என்று அழைத்தார்கள். ஜெயலலிதா இருந்தவரை எந்த பதவியும் தராமல் வைத்திருந்த நிலையில்தான், தன்னை மந்திரியாக நினைத்துக் கொண்டு முனுசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுகவை உடைக்க அவர் தான் காரணமாக இருக்கப் போகிறார் என்று செய்திகள் வருகின்றன” என்றார்.
மேலும் பேசிய ஸ்டாலின், “என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று. இதே பிப்ரவரி 1, 1976 ஆம் ஆண்டில்தான், அவசர நிலை பிரகடன சட்டத்தால் நான் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது எனக்கு வயது 23. திருமணமாகி 5 மாதம்தான் ஆகியிருந்தது. என் மனைவி துர்கா கண் கலங்கி நின்றார். சிறைக்குச் சென்ற பின் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டோம். அங்கிருந்த திமுகவினரை கண்மூடித்தனமாக சிறைக்காவலர்கள் தாக்கினர். நீ தான் கருணாநிதியின் மகனா என்று கொடுமைப்படுத்தினார்கள்.
அடி தாங்காமல் மயங்கி சரிந்த நிலையிலும் என்னை ஒரு காவலர் வயிற்றின் மீது மிதிக்க முயற்சித்தபோது, அதனைக் கண்ட சிட்டிபாபு துடிதுடித்துப் போய் நான் வாங்க வேண்டிய அடிகளை எல்லாம் தன் மீது தாங்கினார். பலத்த காயம் ஏற்பட்டு தொப்புளில் சீள் பிடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்த செய்தியை சிறையில் கேள்விப்பட்டு துடியாய் துடித்தோம். என்ன பேசுவது என்று தெரியாமல் நா தழுதழுத்து நிற்கிறேன். இன்னும் கையில் மிசா தழும்புகள் இருக்கின்றன” என உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பொறுப்பாளர்களுடன் சீமான் ஆலோசனை!