கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள திப்பாளம் கிராமம், மலைப்பகுதிyai ஒட்டியவாறு இருப்பதால், அங்கு மலைப்பாம்புகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது வழக்கம். இச்சூழலில் ஆறு மாதங்களுக்கு முன்பாக அங்கு வந்த ஒசூர் வனத் துறையினர் திப்பாளம் கிராமப் பகுதிகளில் சுற்றிவந்த மலைப்பாம்புகளை பிடித்துச் சென்றனர்.
இந்நிலையில், விவசாயி சென்னப்பா (வயது 48) என்பவருக்குச் சொந்தமான 10 வெள்ளாடுகளை, அவர் மேய்ச்சலுக்காக வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களுக்கு ஓட்டிச் சென்றிருந்தார். அப்போது திடீரென ஒரு ஆடு அலறும் சத்தத்தைக் கேட்ட அவர் அருகில் சென்று பார்த்தபோது, மலைப்பாம்பு ஒன்று அந்த ஆட்டினை முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், பொது மக்கள் வருவதற்குள்ளாக ஆட்டினை மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கி வயற்றில் சேகரித்துக் கொண்டது.
இதனையடுத்து அங்கிருந்து நகர முடியாமல் பாம்பு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து, அந்த மலைப் பாம்பினை பத்திரமாக மீட்ட திப்பாளம் கிராமத்தினர், ஒசூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அம்மலைப் பாம்பினை ஒசூர் வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்று சானமாவு வனப்பகுதியில் விடுவித்தனர்.