கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை 12ஆவது வார்டில் நல்லத்தம்பி தெரு உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடையில் செல்ல வழியில்லாமல் தெருவிலேயே தேங்கி நிற்கிறது. இது குறித்து அப்பகுதியில் குடியிருப்போர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலைகளில் தேங்கி நிற்பதாகவும், இதேபோல் குப்பைகளும் கடந்த 6 மாதங்களாக அகற்றப்படாமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி அலுவலர்கள் மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், பழைய பேட்டை காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.
விவகாரம் பெரிதாகவே நகராட்சி ஆணையர் இந்திரா, நகர காவல் துறையினர் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததன்பேரில், சாலை மறியலை அம்மக்கள் கைவிட்டனர்.
இதனையடுத்து உடனடியாகச் சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர, அலுவலர்களுக்கு ஆணையர் இந்திரா உத்தரவிட்டதன் பேரில் துப்புரவுப் பணி தொடங்கியது.
இதையும் படிங்க: கோயில் இடத்தை ஆக்கிரமித்த குளிர்பானக்கடை: மக்கள் சாலை மறியல்