கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பட்டவராப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புட்ராஜ். இவரது மனைவி தேஜஸ்வினி இவர் கர்ப்பமாக இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக தாயின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும், குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 15ஆம் தேதி குறைப்பிரசவத்தில், அறுவை சிகிச்சை செய்து 855 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையிலிருந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை பெற்றோர் சேர்த்தனர். அரசு மருத்துவர்கள் கடந்த 60 நாட்கள் தொடர் சிசிச்சையால் குழந்தையின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது குழந்தையின் உடல் எடை ஒரு கிலோ 240 கிராமாக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவர்களால் பச்சிளங்குழந்தை காப்பாற்றப்பட்டு, தற்போது நலமுடன் இருக்கிறது. இதற்கு குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களுக்கு நன்றி கூறினர்.