கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வெப்பாலம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. ஆனால் இவர்களுக்கென தனியாக மயான வசதி இல்லை. இவர்களில் எவரேனும் உயிரிழந்தால், சாலையோரத்திலோ, ஓடை ஓரத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ அடக்கம் செய்கின்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் அடக்கம் செய்வதற்கு, கிராமத்தில் உள்ள மற்ற பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இதனால் அவ்வப்பொழுது பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலை மாற, வெப்பாலம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு வாசிகளுக்கென தனியாக மயானம் அமைத்து தரவேண்டுமென்று பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் புதியதாக ஆட்சியர் பொறுப்பேற்றுள்ள நிலையில், கிராம மக்கள் ஒன்றாக இணைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கென தனியாக மயானம் அமைத்து தரக்கோரி மனு அளித்தனர்.