கிருஷ்ணகிரி மாவட்டம், கத்தாளமேடு என்ற பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்த சமத்துவபுரத்தின் முன்பகுதியில் தங்க நிறத்திலான பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இன்று (மார்ச்.7) காலையில் அப்பகுதிவாசிகள் பெரியார் சிலை மீது எரிந்த நிலையில் கிடந்த டயரைப் பார்த்தனர். மேலும் தங்க நிறத்திலான சிலை முழுவதும் கருப்பு நிறத்தில் மாறியிருப்பதை அறிந்த, அப்பகுதிவாசிகள், திராவிடர் கழகத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் சிலையை அவமதித்த அடையாளம் தெரியாத நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகாராஜகடை காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் தீப்பற்றிய டயரை சிலையின் மீது வீசி சென்றது தெரியவந்தது. பின்னர், பெரியார் சிலை மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பெரியார் சிலையை அவமதித்த அடையாளம் தெரியாத நபர்களை கண்டறிந்து கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:நாங்கள் ஸ்வீட் பாக்ஸ் கேட்கும் கட்சி இல்லை - திருமாவளவன் பேச்சு