கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட பிறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில் இங்கு பிரசவம் பார்க்கும் அறையில் செவிலியர்களுக்கு, உதவியாளர்களாக இருக்கும் நபர்கள் பிரசவம் முடிந்தவுடன் குழந்தைகளைக் காட்ட பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்காவிட்டால் குழந்தையை காட்ட மறுப்பதாகவும் மற்றும் பிரசவத்துக்கு வரும் தாய்மார்களைத் தரக்குறைவாகப் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று பிரசவ வார்டில் உள்ள தாய்மார்களின் உறவினர்களும், பெற்றோர்களும் நேற்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "பிரசவ வலியுடன் வரும் தாய்மார்களை அடித்துத் துன்புறுத்துவது, தகாத வார்த்தையில் பேசுவதும் மனிதாபிமானமின்றி பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல் நாள்தோறும் நடைபெறுகிறது. இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு தலைமை மருத்துவரைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் இதுதொடர்பாக புகாரினை அரசு தலைமை மருத்துவரிடம் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என்று கூறினர்.