கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1,300 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்த பள்ளி கட்டடத்தின் முதல் தளத்தில் 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறைகள் உள்ளன. அந்த வகுப்பறைகளில் இருந்த 150 மாணவ, மாணவிகளுக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்காலாக தெரிந்துள்ளது. இதைக்கண்ட ஆசிரியர்கள் மாணவர்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அந்த மாணவர்களிடம் விசாரிக்கையில், ஒரு விதமான வாடையை தாங்கள் உணர்ந்ததாகவும் அதன்பின் மயக்கம், குமட்டல் வந்தாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியிலும், மருத்துவமனையிலும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களை பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், 150 மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. அதில் 67 மாணவ மாணவிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. அவர்கள் நலமாக உள்ளனர். பள்ளிக்கு அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ஏதாவது வாயு கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயக்கம் அடைந்தார்களா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு குழந்தைக்கு ஏற்கனவே இருந்த நோயின் காரணமாக மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மோடியை ஒன்றிய பிரதமர் என்றே சொல்வோம்" - உதயநிதி ஸ்டாலின்