கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த ஒலைப்பட்டியில், தமிழக அரசின் சார்பில் சிப்காட் அமைக்க கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் ஆயிரத்து இருநூறு ஏக்கர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தி, ஏக்கர் ஒன்றுக்கு 17 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் பிரபலமான ஓலா நிறுவனமும், ஷு கம்பெனியும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் தற்பொழுது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சிப்காட் வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடங்கள் விற்பனை செய்யப்பட்டு தொழிற்மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் ஒலைப்பட்டி பிரிவு சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தை மூன்று தனியார் நிறுவனங்கள் அரசு விதிகளின்படி பணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்துள்ளது. இந்த இடங்களை அளவிடும் பணிகள் செய்து, உரிய நிறுவனங்களிடம் நிலங்களை ஒப்படைக்க அதிகாரிகள் இன்று வந்தனர். இந்நிலையில், இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தாய் மற்றும் அவரது அண்ணன் மகன் பழனி, அவரது மகள் உள்ளிட்டோர் நில அளவீடு செய்ய விடாமல் அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் மூதாட்டி சின்னத்தாய் ‘ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு’ என்று அதிகாரிகளை மிரட்டி, ‘நீங்கள் கற்களை நடுங்கள். நான் பிடுங்கி போடுகிறேன்’ என்று மிரட்டியதும் அதிகாரிகள் தயங்கி நின்றனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினர், சிப்காட் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் அடையாத சின்னத்தாய் மற்றும் அவரது உறவினர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: டி.ஏ. உயர்வு ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்!