ஓசூர் சூளகிரி அடுத்த ஆப்ரி என்னும் குக்கிராமம் வனப்பகுதி ஒட்டியவாறு அமைந்துள்ளது. ஊருக்கு பின்புறமாக உள்ள நிலத்தில் வீடு கட்டி முனுசாமி என்கிற அப்பையாவின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நேற்று (ஆக.18) அமாவாசை என்பதால் முதியவர் வனப்பகுதியில் அமைந்துள்ள நாகாளம்மா கோவிலில் வழிபட தனியாக சென்றதாக கூறப்படுகிறது.
இரவு முழுவதும் முதியவர் அப்பையப்பா வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேடி உள்ளநிலையில், இன்று(ஆகஸ்ட் 19) அதிகாலை ஒற்றைக்காட்டுயானை அப்பகுதியில் சுற்றி திரிந்ததால் சந்தேகமடைந்த முதியவரின் உறவினர்கள் நாகாளம்மா கோவிலுக்கு செல்லும் ஒத்தையடி பாதையில் தேட சென்றபோது யானை தாக்கி முதியவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வனத்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஓசூர் எம்எல்ஏ சத்யா பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
யானைகள் கிராம பகுதிக்குள் வெளியேறுவதை தடுக்க சோலார் மின்வேலிகளை அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் அடுத்த சூளகிரி அருகே செட்டிப்பள்ளி வனப்பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக்காட்டு யானை தாக்கி ஆக.16 அன்று இரண்டு விவசாயிகள் இறந்த நிலையில், பேரண்டப்பள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றையானை தாக்கி ஆப்ரி கிராமத்தைச் சார்ந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் வனப்பகுதி ஒட்டிய கிராம மக்களை அச்சமடைய வைத்துள்ளது.