கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பன்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கட்டராமப்பா (70) என்பவர் பாகலூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்துவந்துள்ளார்.
இவருக்கும், தேர்ப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரத்குமார், முதியவரிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் இருந்த சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் முதியவரின் தலையில் பலமாக அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து மது போதையில் இருந்த சரத்குமார் பாகலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர் சரத்குமரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.