கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொடியாளம் கிராமத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் சுனில் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வாலிபால் விளையாடியபோது சாதி ரீதியாக சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாயன்று சுனில் புகைப்பிடித்துவிட்டு அந்த புகையை தங்கள் மீது ஊதியதாகக் கூறி அதே இளைஞர்களுடன் சுனிலுக்கு மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அன்று மாலையே கொடியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்தன் என்ற இளைஞர் சுனிலை கொத்தப்பள்ளி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அங்கு இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்டவைகளில் சுனிலை சரமாறியாக தாக்கினர்.
இதில், உடல்முழுவதும் காயமுற்ற நிலையில் சுனில் சரிந்து விழுந்தார். பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 2) சுனிலின் வலதுகால் மூட்டிக்கு கீழ்ப்பகுதியை முழுமையாக மருத்துவர்கள் அகற்றினர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) சுனில் உயிரிழந்தார்.
இதையடுத்து எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நவீன், அனில், ஜனார்த்தனன் ஆகிய 3 பேரையும் பாகலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் சுனிலை ஐந்துக்கும் மேற்பட்டோர் சாதிய நோக்கத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில், பட்டியலின மக்கள் அச்ச உணர்வுடன் நாள்களை நகர்த்திவருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க கொடியாளம், கொத்தப்பள்ளி ஆகிய கிராமங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பட்டியலின இளைஞர் உயிரிழப்பு: கலசப்பாக்கம் அருகே 144 ஊரடங்கு உத்தரவு