ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SPACE KIDZ INDIA) என்ற அமைப்பு 'விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்' என்ற போட்டி ஒன்றை கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை மாணவர்களுக்கான 30 கிராம் எடையுள்ள துணைக்கோள் வடிவமைப்பு போட்டி இணையதளம் வழியாக நடத்தப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லதான கொத்தப்பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியை சுபாஷினி வழிகாட்டுதலின்படி ஒன்பது மாணவர்கள் சேர்ந்து ’நேனோ-அவ்வி’ என்ற 30 கிராம் துணைக்கோளை வடிவமைத்துள்ளனர்.
'நேனோ-அவ்வி துணைக்கோள்' வடிவைமைப்புப் பற்றி மாணவர்கள் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், "இத்துணைக்கோளானது பூமியிலிருந்து உயரே ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடிவரை பயணித்து அங்குள்ள சுற்றுப்புறத்தை ஆய்வுசெய்யும்.
மேலும் வளிமண்டல நிலை, காற்றழுத்தம், வானிலை, வெப்பம், வெப்பநிலை, விண்வெளியில் உள்ள ஈர்ப்பு விசை, திசைவேகம் ஆகியவற்றினை இத்துணைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 'அவ்வி' உணர்வி (சென்சார்) கருவி கேட்பொலி (ஆடியோ), காணொலியாக பதிவுசெய்து திரும்பும். இந்த அவ்வி துணைக்கோள் இன்று விண்வெளியில் செலுத்தப்படவிருக்கிறது" என்று தெரிவித்தனர்.