கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரின் முக்கிய நீர் ஆதாரமான ராமநாயக்கன் ஏரியின் நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து, இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கோரிக்கை எழுந்ததால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 24.50 லட்சம் ரூபாயும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 25.50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவடைந்தாலும் தண்ணீர் வரத்து இல்லை.
இந்நிலையில் ஏரியை கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் பேசியதாவது, கெலவரப்பள்ளி அணையிலிருந்து ராமநாயக்கன் ஏரிக்கு நீர் கொண்டு வரவேண்டும் என்பது ஓசூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஏரியை மேம்படுத்த பல லட்சம் செலவு செய்தும், தண்ணீர் கொண்டு வரவில்லை என்பது வேதனையளிக்கிறது. தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள கேட் வால்வை திறந்திருந்தால் தண்ணீர் இயல்பாகவே பாய்ந்திருக்கும். 200 ஏக்கர் அளவிலிருந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ளது.
ஏரிக்கு நீர் நிரப்பவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருக்கிறேன். அவரும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதற்கு மின்சார செலவு செய்வது குறித்தும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதனை அரசு கவனித்துக் கொள்ளும். இருப்பினும், காங்கிரஸ் தொழிற்சங்கம் ஐஎன்டியுசி சார்பில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் மனோகரன் ஏரிக்கு நீர் நிரப்ப மின்சாரக் கட்டணம் செலுத்த தயார் என கூறிய பிறகும், தண்ணீருக்கான ஏற்பாடு நடைபெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 10 முதல் 15 நாள்களில் நீர் நிரப்பவில்லையெனில், மக்கள் பிரதிநிதி என்ற முறையிலும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி எம்.பி என்ற முறையிலும் மாநகராட்சி முன்பு நானே உண்ணா விரதம் மேற்கொள்வேன்” என்றார்.
முன்னதாக, டிவிஎஸ் தொழிற்சங்கம் அலுவலகத்தில் ஐஎன்டியுசி சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு எம்பி செல்லகுமார் 500 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
இதையும் படிங்க: 'குறைவான கரோனா பரிசோதனை விபரீதத்தை ஏற்படுத்தும்'