கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ராமகிருஷ்ணபதி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக கவிதா என்பவரும், சமையலராக ராதிகா என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து சத்துணவு முட்டைகளை அடிக்கடி வெளியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் மதிய உணவு வேளையில் முட்டை இல்லாமல் உணவு உட்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று(நவ.24) பள்ளியில் மதிய உணவுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை பெண் ஒருவர் சாப்பாடு எடுத்துச் செல்வது போல, பாத்திரத்தில் மறைத்து எடுத்து சென்றுள்ளார். இதைக் கண்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவும், முட்டைகளும் இருந்தன.
இதுகுறித்து கேட்டபோது, சத்துணவு ஊழியர்கள் இந்த முட்டையை கொடுத்து அனுப்பியதாக அந்த பெண்மணி கூறினார். இதை வீடியோவாக எடுத்த இளைஞர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும், சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.