கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான அனைத்துத் துறை அலுவலர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள எல்லையோர பகுதிகளில் உடனடியாக சோதனை சாவடிகள் அமைத்து நோய் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும்,
இப்பணிகளை வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை, காவல் துறை, கால்நடை பாராமரிப்பு ஆகிய துறைகள் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அதேபோல இந்து சமய அறநிலைய துறை, சுகாதாரத்துறை இணைந்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதோடு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஓசூர், கிருஷ்ணகிரியில் உள்ள வணிக வளாக உரிமையாளர்களிடம் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் வரும் 31ஆம் தேதிவரை மூட அறிவுறுத்தவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர், பர்கூர், தேன்கனிக்கோட்டை என 22 திரையரங்குகள் உடனடியகாக மூடப்படவேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்தி நோய் தடுப்புப் பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நோய் தடுப்பு பணிகளுக்கு தேவையான கிருமி நாசினிகள், மருந்துகள், உபகரணங்கள் போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். நோய் குறித்து தெரியவந்தால் உடனடியாக சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைக்கு அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்த நோய் தடுப்பு பணிகளை நமது மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் கரோனா எதிரொலி - ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை