மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக நகரக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில விவசாய அணித்துணைத் தலைவர் மதியழகன், திமுக நகரச் செயலாளர் நவாப், முன்னாள் எம்.பி. சுகவனம், திமுக மகளிர் அணி பொறுப்பாளர் பரிதா நவாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது சிறுபான்மை பெருமக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தினைக் கொண்டு வந்த மத்திய அரசுக்கு துணைப் போன எடப்பாடி அரசினைக் கண்டித்து எழுப்பி கண்டன முழக்கங்களைப் பதிவு செய்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஒரு விளக்கம்:
டிசம்பர் 9ஆம் தேதி குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய ஒன்பது மணி நேரம் நீண்ட விவாதத்திற்குப் பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும் எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குடியுரிமை திருத்த மசோதாவில் உள்ள அம்சங்கள்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆவணங்களின்றி அகதிகளாக வரும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள், ஜெயின் மதத்தினர், பௌத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு அத்தகைய குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படும் நிலை மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், இது ஒரு சிறுபான்மையின இருட்டடிப்பு என அகில இந்திய அளவில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக வந்தவர்கள் மட்டுமே குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்ற தகவல்கள் இந்த அம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவின் அடிமை அதிமுக - தயாநிதி மாறன் கடும் விமர்சனம்