தமிழ்நாட்டின் மிகப்பெரிய உழவர் சந்தையான ஓசூரில் நாளொன்றுக்கு 85 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விடுமுறை நாட்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் மற்ற நாட்களில் 10 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
கரோனா அச்சத்தால் மக்கள் மொத்தமாக கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது, ஆனால் ஓசூர் உழவர் சந்தையில் பல ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் கூடி வருகின்றனர். 144 தடை உத்தரவை மீறி பல ஆயிரம் மக்கள் உழவர் சந்தைக்கு வந்ததால், உழவர் சந்தை அலுவலர்களால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
காய்கறி வாங்கச் செல்வதாகக் கூறி இளைஞர்கள் சிலர் சாலைகளில் வாகனங்களுடன் ஆட்டம் போட்டுள்ளனர். புதிய முடிவு ஒன்றை உழவர் சந்தை அலுவலர்கள் எடுத்துள்ளனர். மொத்தமுள்ள 298 கடைகளில் ஒரு கடை விட்டு, ஒரு கடையில் காய்கறி விற்க இன்று முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மக்களை நிறுத்தி உள்ளே அனுமதிக்க ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதற்கு மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தால் உழவர் சந்தையில் உள்ள விவசாயிகளை பிரித்து எம்.ஜி.ஆர்., மார்க்கெட், வசந்த் நகர் மற்றும் போக்குவரத்து காவல்நிலையம் பின்புறம் என மூன்று இடங்களில் காய்கறி கடைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், உழவர் சந்தைக்கு வருபவர்கள் கைகளை சோப்பால் சுத்தம் செய்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி சாலைகளில் மருந்துகள் லாரி மூலம் தெளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் - ஆவின்