கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த எர்ரம்பட்டி கிராமத்தில் விவசாயி அப்புனு என்பவரது நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் இந்தக் கிணற்றில் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை கிணற்றிலிருந்து யாரோ கத்துவது போல் சத்தம் கேட்டதையடுத்து அவ்வழியே சென்ற சிலர் எட்டிப்பார்த்தனர். அப்போது கிணற்றில் ஒருவர் உயிருக்கு போராட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு கிணற்றில் விழுந்து கிடந்த இளைஞரை கயிற்றின் மூலம் காப்பாற்றினர். இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரிடம் இதுகுறித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அரங்கநாதன் (32) என்பதும், லாரி ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், நேற்று இரவு எர்ரம்பட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு இரவில் இவ்வழியே சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்ததாகவும், விழுந்த வேகத்தில் மயக்கமடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.