கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதேப்பள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டுக்கான ஒன்றாவது சுற்றில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 100.37 லட்சம் பசு, எருமை ஆகிய கால்நடைகளுக்கு காது வில்லைகள் போடப்பட்டு கோமாரி நோய் தடுப்பூசி பிப்ரவரி 28ஆம் தேதி முதல் 21 நாள்கள் தொடர்ந்து போடப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4,19,000 கால்நடைகளுக்குத் தொடர்ச்சியாகத் தடுப்பூசி போடும் பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொண்டுவருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள், 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு நேற்று முதல் அந்தந்த கிராமங்களில் நடைபெறும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் செய்த கல்லூரி மாணவனிடம் பணம் பறிப்பு