கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேச ஒற்றுமை பிரசாரம் என்ற பெயரில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' வாசகத்தை கொண்டு ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35அ பிரிவுகள் பற்றிய விவாதம் (மக்கள் சந்திப்பு) மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். 70 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து தனிமைப்பட்டு இருந்த ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மட்டுமே நீக்கப்பட்டது. அதுதவிர மற்ற எந்த ஷரத்துக்களையும் நீக்கும் திட்டம் பாஜகவிடம் இல்லை.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து நாடு முழுவதும் விளக்கக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் முழு நோக்கம் இதுகுறித்த முழுமையான தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்” என்றார்.