கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(60). விவசாயக் கூலியான இவர், தென்னை ஓலைகளை விலைக்கு வாங்கி வந்து துடைப்பம் செய்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் தென்னை ஓலைகளை வாங்குவதற்காக தனியார் விவசாய நிலத்திற்கு முருகன் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட மலைத் தேனீக்கள் அவரை கொட்டியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க அருகே மோகன் என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தண்ணீர் தொட்டியில் குதித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவரது உடலில் விஷம் ஏறியுள்ளது.
இதில், முருகன் தண்ணீர் தொட்டியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். இவர் இறந்து கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் முதியவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேனீக்கள் கொட்டி இறந்த முருகனின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு தரவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : சுஜித்தின் மரணம் மிகுந்த துயரம்...! - ஆளுநர் இரங்கல்