கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி நீர் திறக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு இறுதியில், கடலூர் அருகே வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாசனத்திற்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் கெலவரப்பள்ளி மற்றும் கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 44 அடி உயரம் கொண்ட கெலவரப்பள்ளி அணை, தற்போது 42 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கிருஷ்ணகிரி பெரிய முத்து ஊரில் உள்ள கேஆர்பி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1800 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் உள்ள எட்டு மதகுகளில் ஏழு பிரதான மதகுகளும் உறுதித்தன்மை இல்லாத காரணத்தினால் அனைத்து மதகுகளிலும் அதிக அளவில் நீர்க்கசிவு உள்ளது. மேலும் கடந்த 13 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் மூழ்கி 19 பேர் உயிரிழந்து உள்ள காரணத்தால் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக்கடக்க வேண்டாம் என பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுப்பணித்துறை தடைவிதித்துள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி: செல்ஃபி மோகத்தில் அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு!