ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சுற்றித் திரிந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு காட்டு யானைகளை, தற்போது பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகளைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், யானைகளைப் பிடிப்பதற்கு உண்டான சாதகமான சூழல் இதுவரை வனத்துறையினருக்குக் கிடைக்கவில்லை. இதனால் காட்டு யானைகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், பேரண்டப்பள்ளி வடபகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, இன்று காலை வனத்துறையினர் தயாராகினர். இதற்காக வனத்துறை அலுவலர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதிலிருந்தும், 60க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் பேரண்டப்பள்ளி வனத்துறை அலுவலகத்தில் குவிந்தனர்.
பின்னர் அங்கிருந்து இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ள பேரண்டப்பள்ளி வனப் பகுதிக்குச் சென்றனர். அங்குக் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து அறிந்த பின்னர் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளனர், இதற்காக இரண்டு கும்கி யானைகளும் தயாராகி வருகிறது.