கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர், வேப்பனஹள்ளி, தளி, ஓசூர், சூளகிரி ஆகிய இடங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலங்களில் பலத்த பாதுகாப்புடன் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மணிமேகலை நாகராஜ் வெற்றிபெற்றார். அது போல பர்கூர் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கவிதா கோவிந்தராசன் தேர்வானார். மேலும், மத்தூர், வேப்பனஹள்ளி, தளி ஆகிய ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் கைப்பற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், நான்கு ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை கைப்பற்றியதைத் தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், பேரறிஞர் அண்ணா, மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் வெற்றிபெற்ற ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா கோவிந்தராசன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் தேவைகளை முழுமையாக செயல்படுத்துவோம் என்று உறுதியளித்தார்.
இதையும் படியுங்க: பாஜகவின் ஆதரவால் குமரியைக் கைப்பற்றிய அதிமுக