கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நெசவாளர் தெருவில் வசித்துவரும் நெசவாளர் சோமசேகர் என்பவர் வீட்டில் அதிகாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
சோமசேகரன் மனைவி ஷீலா தன் வீட்டு உபயோகத்திற்காக கூடுதல் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கிவைத்துள்ளார், இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் அனைவரும் உணவு உண்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது கூடுதலாக வாங்கிய சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். நேற்று காலை சுமார் 6:30 மணியளவில் சோமசேகர் எழுந்து லைட்டை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்கனவே கசிந்து இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
இதில் சோமசேகர், அவருடைய மனைவி ஷீலா, அவருடைய இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். மேலும் வீட்டின் கதவு, சன்னல், பீரோ உள்பட வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன.
சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று நால்வரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வீராணம் ஏரியின் தண்ணீர் குழாயில் திடீர் தீ விபத்து