கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லப்பட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் போதிய மழை பெய்யாததால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு போனது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பது மட்டுமின்றி கால்நடைகளுக்குக்கூட தண்ணீர் கிடைக்காத அளவில் ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளது.
இதையடுத்து, முன்னோர்களின் வழிகாட்டுதல்களின்படி கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனைத்து கிராம மக்களும் ஊரை விட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்று குடியேறினார்கள். இவர்கள் பகல் முழுவதும் வனத்தில் தங்கியிருந்து வனதேவதையான கங்கம்மாவுக்கு காட்டு மலர்களால் சிறப்பு பூஜைகள் செய்து மழை வேண்டி வழிபட்டனர்.
இதையடுத்து, மாலையில் ஒன்றுக் கூடிய கிராம மக்கள் ஊரின் எல்லை பகுதியில் ஆட்டை பலியிட்டு பூஜைகள் செய்த பின் மீண்டும் கிராமத்திற்குள் சென்றனர். இவ்வாறு, மழை இல்லாத நேரங்களில் கிராமத்தை காலி செய்து அனைவரும் வனப்பகுதிக்கு சென்று வனதேவதையை வழிபட்டால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் காலங்காலமாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: 'றெக்கை கட்டி பறக்கும் தமிழ்' - இனி தமிழ் மொழியிலும் விமான அறிவிப்புகள்