கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர், தண்டபாணி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் சுபாஷ் (28), திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்த அரியலூர் மாவட்டம் ஜெயக்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுபாஷின் தந்தை, தனது மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அனுசுயாவின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த மார்ச் 27ஆம் தேதி சுபாஷ் - அனுசுயா திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளனர். சுபாஷ், திருப்பத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே சுபாஷின் பாட்டியும், தண்டபானியின் தாயுமான கண்ணம்மாள், சுபாஷின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவித்ததோடு, வாடகைக்கு வீடும் பார்த்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனது தாய் கண்ணம்மாளிடம், ‘உனது பேரனை வீட்டிற்கு விருந்திற்கு வரவழைத்து சமாதானம் பேசிக் கொள்ளலாம்’ என தண்டபானி கூறியுள்ளார். இதனால், தனது பேரன் சுபாஷ் மற்றும் அவரது மனைவி அனுசுயா ஆகியோரை தமிழ் புத்தாண்டுக்கு, அருணபதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு பாட்டி கண்ணம்மாள் அழைத்து உள்ளார். இதனையடுத்து இருவரும், நேற்று (ஏப்ரல் 14) ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, இரவு உணவு முடித்து விட்டு, அங்கேயே இருவரும் தங்கி உள்ளனர். அப்போது அங்கு வந்திருந்த தண்டபாணி, இருவரிடமும் சகஜகமாக பேசி உள்ளார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 15) அதிகாலை 5 மணியளவில், தண்டபாணி கூர்மையான கத்தியால், தனது மகனை வெட்டி உள்ளார். இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி கண்ணம்மாள் மற்றும் மனைவி அனுசுயா ஆகியோர் தண்டபானியை தடுத்துள்ளனர்.
அப்போது, தனது தாய் கண்ணம்மாள் மற்றும் மருமகள் அனுசுயாவையும் வெட்டி உள்ளார். இதில், அனுசுயா மயக்கம் அடைந்ததால், அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து, தண்டபாணி அங்கிருந்து தப்பியோடி உள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அனுசுயா, வீட்டிற்குள் சென்று அங்கிருந்து செல்போனை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்றுள்ளார். இருப்பினும், குறிப்பிட்ட சில தூரத்தில், அனுசுயா சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து காலை 6 மணியளவில் கிராம மக்கள் அவ்வழியே செல்லும்போது, ரத்தக் காயங்களுடன் கிடந்த அனுசுயாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுசுயா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த, ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்வின் மற்றும் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து சுபாஷ் மற்றும் கண்ணம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டு, உடற்கூராய்விற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை, கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் ஊத்தங்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள தண்டபாணியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - கிருஷ்ணகிரியில் நடுரோட்டில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமனார்!