கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ராமைய்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(30). இவர் 32 ஆடுகளை (செம்மறி, வெள்ளாடு) வளர்த்து வருகிறார். பிரவீன் வளர்க்கும் ஆடுகளில் ஜூலை 17 முதல் தினம்தோறும் ஒவ்வொன்றாக காணாமல் போனது.
ஒவ்வொரு ஆட்டின் விலை 10 ஆயிரத்திற்கும் அதிகம் என்பதால் பிரவீன் நேற்று (ஜூலை 22) ஆடுகளை மேய்க்கவிட்டு ஒளிந்திருந்து நோட்டமிட்டுள்ளார். அப்போது நண்பகல் 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டை திருடி செல்ல முயன்றனர்.
உடனடியாக விரைந்து வந்த பிரவீன், பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்ததுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து ஓசூர் நகர காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது, ஓசூரை சேர்ந்த குணா(29), பழனி(32) என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை: பொதுமக்கள் அச்சம்