கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு கூட்டம் மக்களவை உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய- மாநில அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் குறைகள் குறித்தும் பொது மக்களின் தேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்கப்பட்டது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படும் இந்தக் கூட்டம் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கூட்டப்பட வில்லை. எனினும் நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைந்து செயல்படுத்த கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
வழங்கபட்டுள்ள நிதியினை குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்கள் என 5 பேர் கைது செய்ய பட்டுள்ளனர். யார் மோசடி செய்திருந்தாலும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு சில இடங்களில் தொகையானது வேறு சிலருக்கு கொடுக்க பட்டதாக புகார் வந்துள்ளது. அரசின் திட்டத்தில் யார் மோசடி செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த மாவட்டத்தில் இயற்கை வளங்களை அரசுக்கு தெரியாமல் மோசம் செய்பவர்களை அலுவலர்கள் நேர்மையுடன் கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து மக்களுக்கு தேவையான திட்டத்தின் பயன்களை நேர்மையாக சென்று சேர அனைத்து அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செங்குட்டுவன், பிரகாஷ், முருகன், சத்யா, அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.