கிருஷ்ணகிரி: ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்டப் பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காரணமாக 2,200 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா, ஜர்பரா, கார்னெஷன், கிராஷாந்தி உள்ளிட்ட மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப்படும் தரமான ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், பெங்களூரு வர்த்தக மையம் மூலமாக, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா காலங்களில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புவரை 30 முதல் 40 லட்சம் மலர்களும், காதலர் தினத்துக்கு ரூ.1 கோடி மலர்களும் ஏற்றுமதியானது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உற்பத்தி பாதிப்பு, மழையின்மை, வறட்சி, பணமதிப்பிழப்பு, கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்கு ரோஜா மலர் ஏற்றுமதி படிப்படியாக சரிந்துவருகிறது. இந்நிலையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படாததால், வெளிநாடுகளில் ஓசூர் மலர்கள் மீதான கவன ஈர்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி சரிந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ரோஜா மலர் சாகுபடி செய்யும் விவசாயி பாலசிவபிரசாத் கூறும்போது, 'ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரோஜா மலர் சாகுபடி அதிகரித்துள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும், புது, புது ரகங்களில் மலர் சாகுபடி செய்கின்றனர். ஓசூர் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட தாஜ்மஹால், அவலாஞ், நோயிளஸ் போன்ற ரோஜா மலர்கள் மட்டுமே, வெளிநாட்டு சந்தையில் போட்டியிடும் நிலையுள்ளது.
ஆனால், புதுவகையான ரோஜா ரகங்கள் இல்லாததால், நமது மலர்கள் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது. வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் 15 லட்சம் மலர்கள் ஏற்றுமதியாகும். நடப்பாண்டில் 5 முதல் 7 லட்சம் ரோஜா மலர் ஏற்றுமதியாகி உள்ளது. மத்திய அரசு மலர்களுக்கான வேளாண் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் ரூ.5,990 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரோஜா உள்ளிட்ட மலர்கள் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி இதன் மூலம் புதுவகையான ரோஜா மலர்களான லவ்லி ரெட், எக்பிரெஷன், பிரைம் டைம் முதலான புதிய ரகங்களை அறிமுகப் படுத்தி வெளிநாட்டு மலர்ச் சந்தைகளில் இந்திய நாட்டு மலர்களை போட்டியிடவைக்க வேண்டும். அவ்வாறு, போட்டியிடாவிடில், வெளிநாடு மலர் சந்தைகளில் நம் நாட்டு மலர்களுக்கான வரவேற்பு இல்லாமல் எதிர்காலத்தில் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிய கொடுமைகளை களைந்திடுக - மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்