கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க 3800 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்தும், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிட வலியுறுத்தி உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "வளர்ச்சி என்கிற பெயரில் அரசாங்கம் நிலவளம், காற்று, நீர் ஆகியவற்றை நாசமாக்கி வருகிறது. அணு உலை இல்லையென்றால் மின்சாரம் எங்கே என்கிறார்கள், பிற நாடுகள் வாகனங்களின் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்தும் மின்சாரம் தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் தான் நாம் யோசிக்க வேண்டும் மாற்று உண்டு.
கரும்பு வழங்கினால் பண்டிகை என்கிற நிலையில் வளர்ச்சியை எப்படி செய்வீர்கள். விளைநிலத்திற்கு பயன்படாத நிலத்தை எடுக்காமல் விவசாய நிலத்தை எடுப்பது ஏன்? இந்தி, நீட்டை இதுவரை எதிர்ப்பது தமிழகம் தான், காரணம் தூய ரத்தம் ஓடுகிறவர்கள் தான், தமிழர்கள். ஓசூர் பகுதிகளில் உள்ள 2 சிப்காட் மூலம் என்ற வளர்ச்சியை கண்டுள்ளோம். ஏற்கனவே வெங்காயம், பருப்பு வெளிநாடுகளில் வாங்குகிறோம். விளைநிலத்தை அழித்தால் தற்சார்பு எப்படி அமையும்” என விமர்சித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் மீது பிரதமருக்கு சிறப்பு கவனம்: அண்ணாமலை