கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள நாட்றம்பாளையம் பஞ்சல்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ்(37). இவர் பெலகொண்டபள்ளி கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மனைவி ஜோதியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்களாகி, ஆறு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. சின்னராஜ் அப்பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் ஜேசிபி வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று சின்னராஜ் வீட்டில் தூங்கி கொண்டிருந்தப்போது மனைவி ஜோதி உட்பட நான்கு பேர் அவர் மீது அமர்ந்து, கை கால்களை பிடித்துக்கொண்டு வாட்டர் ஹீட்டர் மூலமாக மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சித்துள்ளனர். நல்வாய்ப்பாக அவர்களிடமிருந்து படுகாயங்களுடன் தப்பித்த சின்னராஜ் தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து சின்னராஜ் தெரிவிக்கையில், "என் மனைவி ஜோதிக்கு திருமணத்தை தாண்டிய உறவு ஒருவருடன் இருக்கிறது. இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் பல நேரங்களில் அந்த நபருடன், ஜோதி வீட்டை விட்டு வெளியேறி சென்றிருக்கிறார்.
மகனின் எதிர்க்காலத்திற்காக நான் மீண்டும் ஜோதியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து வாழ்ந்துள்ளேன். நான் எப்போதும் அவர்கள் உறவுக்கு இடையூறாக இருந்து வந்ததாலே இரவோடு இரவாக என்னை நான்கு பேர் உதவியுடன் ஜோதி கொல்ல முயற்சித்துள்ளார்" என சின்னராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.