கிருஷ்ணகிரி: தமிழகம் - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் 30-க்கும் அதிகமான பட்டாசுக் கடைகள் உள்ளன. ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி, இங்குள்ள கடைகளில் பட்டாசு விற்பனை களைகட்டும். இங்குள்ள கடைகளுக்குத் தமிழகத்திலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் தினக்கூலிகளாக ரூ.600-க்காக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகா மாநில எல்லையில் ராமசாமி ரெட்டி என்பவரின் நிலத்தில், அவரது மகன் நவீன் என்பவர் நடத்தி வந்த பட்டாசுக் கடையில் தீபாவளியையொட்டி, கள்ளக்குறிச்சியிலிருந்து 5 பேர், வாணியம்பாடியிலிருந்து 10 பேர், தருமபுரியிலிருந்து 10 பேர் என 30-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் வேலைக்காகச் சென்றிருந்தனர்.
இதனிடையே, கடந்த அக்.7-ல் பட்டாசுகளைப் பெரிய கண்டெய்னர் லாரியில் இருந்தும் டாடா ஏஸ் வேனிலிருந்தும் ஏற்றி இறக்கி வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இரண்டு வாகனங்களும் எலும்புக்கூடாகின. அதோடு, இந்த வெடிவிபத்தில் இப்பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் 14 பேர் மரணம் முதல் அமைச்சர்கள் ஆய்வு வரை முழுத் தகவல்கள்!
இந்த சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி உள்ளிட்டோர் அரசின் நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கியிருந்தனர்.
இந்த விபத்தில் ஏற்கனவே 14 நபர்கள் உயிரிழந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி, வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்(18) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று (அக்.11) உயிரிழந்தார். இதனால் அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து: தருமபுரியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் பலி!