கிருஷ்ணகிரி தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், ஓசூர் திமுக வேட்பாளர் பிரகாஷ், வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர் முருகன், பர்கூர் வேட்பாளா் மதியழகன், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளா் ஆறுமுகம், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று வேப்பனஹள்ளி பகுதியில் தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “பழனிச்சாமி கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது. பழனிசாமியின் சம்பந்திக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவசர அவசரமாக அதற்கு உச்ச நீதிமன்றம் போய் தடை வாங்கினார் பழனிசாமி. ஏன், திராணி தெம்பு இருந்தால் வழக்கை எதிர்கொள்ள வேண்டியதுதானே.
இந்த ஆட்சியின் நம்பர் ஒன் கலெக்சன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. இவர் ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதாக பல கோடி ஊழல் செய்துள்ளார். மின்துறை அமைச்சா் தங்கமணி மீது நிலக்கரி வாங்கியதில் ஊழல், ஜெயக்குமார் மீது வாக்கி டாக்கி ஊழல், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் மீது பாரத் நெட் ஊழல், விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது கரோனா காலத்தில் மத்திய அரசிடம் அரிசி வாங்கியதில் கோடி கோடியாக கொள்ளைப்புகார் உள்ளது. ஆனால், எந்த முறைகேடும் இல்லை என எடப்பாடி பழனிசாமி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறி வருகிறார்.
ஆட்சியின் கடைசி நேரத்தில் கூட ஒரு மாத இடைவெளியில் மூன்று ஆயிரம் கோடி வரை டெண்டா் விட்டு கொள்ளையடித்துள்ளனர். திமுக வந்தவுடன் இந்த ஊழல்களை கண்டுபிடிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். எனவே, ஒட்டுமொத்த தமிழகத்தை மீட்கத் தான் இந்தத் தேர்தல். மாநில உரிமை காக்க தொழில் வளர்ச்சி பெருக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வேளச்சேரி அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார்!