தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் கரோனோ வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளுக்காக அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட குழுக்களின் அலுவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஆலோசனை நடத்தினார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய ஆட்சியர், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல முயலும் பணியாளர்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலோ, முகாம்களிலோ தங்கவைத்து அவர்களுக்கு அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
சொந்த ஊர்களுக்கு நடைபாதையாகச் செல்வோரை அனுமதிக்கக் கூடாது. அவர்களை வட்டார அளவில், தாலுகா அளவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வட்டாரப் போக்குவரத்து துறையினர் சீல் வைக்கப்பட்ட மாவட்ட எல்லைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அதேபோல் அனைத்து துறையினரும், கரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா: செவிலியருக்குப் பதிலாக ரோபோவா? அரசு மருத்துவமனையின் சோதனை முயற்சி...