உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனோ வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முனைப்போடு செயலாற்றி வருகின்றன. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்து துறைகளும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்று கண்டறிதல் சோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு மனவள, உடல்நல ஆலோசனை வழங்குவது, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வீட்டிற்கே கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் துரித கதியில் சீராக முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அம்மாவட்ட நிர்வாத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்துள்ள கட்டிகானப்பள்ளி ஊராட்சி ராஜாஜி நகரில் செயல்படும் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவசமாக பொருள்கள் வழங்கப்படுவது குறித்தும், தகுந்தர் இடைவெளி விட்டு பொருள்களை பொதுமக்கள் வாங்கி செல்கிறார்களா என்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் பிரபாகர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ’ஒளிரும் கிருஷ்ணகிரி’ அமைப்பினர் சார்பில் அனுராதா வணிக வளாகத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் வருவாய் துறை, காவல் துறை, ஊர் காவல் படை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு நாள்தோறும் உணவு தயார் செய்துதரும் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : மத்தியக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை...!