தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு அனைத்து கிளைகளிலும் 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா இன்று (அக்16) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெய்சத்திரபானு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், இந்தாண்டு புதிதாக வந்துள்ள புதிய ரக சேலைகளை பார்வையிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புதிய ரகங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் தீபாவளி பண்டிகைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
இங்கு பாரம்பரியங்கள் புதுபிக்கும் விதமாக செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள், காதா காட்டன் சேலைகள், மதுரை, தஞ்சாவூர் காட்டன் சேலைகள், பருத்தி மற்றும் பரமக்குடி ஆயிரம் புட்டு சேலைகள், ஈரோடு காதா டிசைனர் போர்வைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் ஓசூர் விற்பனை நிலையத்தின் இந்த ஆண்டு விற்பனை இலக்காக ஒரு கோடியே 60 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு இயக்குநர்கள் பாலசுப்பிரமணியம், லலிதா, ராஜராஜேஸ்வரி, வினோத் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.