கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர், சிறுவன் போன்று உடையணிந்து, தனது தம்பியுடன் கடந்த சில வாரங்களாக சுக்கு காபி விற்றுவந்தார். கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் பெண் ஒருவர், கூலி வேலை செய்து தனது குடும்பத்தை நடத்திவந்தார்.
இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு மட்டும் தற்போது திருமணமாகியுள்ளது. கரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த சில வாரங்களாக சரிவர கூலி வேலையும் கிடைக்காததால், குடும்பத்தை நடத்த திண்டாடி வந்துள்ளார்.
இதனால் வேறுவழியின்றி, தனது 11 வயது பெண் குழந்தையையும் அவருக்கு துணையாக இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது ஆண் குழந்தையையும், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் சுக்கு காபி விற்க அணுப்பியுள்ளார்.
சமூகத்திலிருக்கும் கயவர்களிடமிருந்து பாதுகாக்க, தனது 11 வயது பெண் குழந்தைக்கு முழு கை சட்டை அணிந்து சிறுவன் போல வேடமணிந்து காபி விற்க அனுப்பிவைத்துள்ளார். சில நாள்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தில் இருந்த நகராட்சி ஆணையரிடம் இவர்கள் எதர்ச்சையாக டீ விற்க முனைந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, ஆணையர் இவர்களுக்கு டீ விற்கும் ட்ரம் உள்ளிட்ட சில பொருள்களை வாங்கி கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, இச்சம்பவத்தை குழந்தை தொழிலாளர் பிரச்னையாக கருதிய மாவட்ட குழந்தை நலப் பாதுகாப்பு அலுவலர்கள், தாமாக முன்வந்து குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
அதன் பின், அவர்கள் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் வள்ளலார் காப்பகத்தில் இருவரையும் சேர்த்தனர். இதுதொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், "இளம் சிறார் நீதி குழுமத்தின் நன்னடத்தை அலுவலரின் பரிந்துரைப்படி மீட்கப்பட்ட இரு குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நலத் குழுமத்திடம் ஒப்படைத்தோம்.
அவர்கள் குழந்தைகளை நன்னடத்தை அலுவலர் மூலமாக குழந்தைகளை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், சிறுவர் நீதிக் குழுமச் சட்டப்படி மீட்கப்பட்ட குழந்தைகள் 18 வயது வரை படிக்க வைக்க வேண்டும் என்பது குறித்து, அக்குழந்தைகளின் தாயாருக்கு அறிவுரை வழங்கியதோடு, சட்டத்தில் உள்ளவை குறித்தும் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, இனிமேல் தனது குழந்தைகளை எவ்வித பணிக்கும் அனுப்பாமல் வீட்டில் வைத்து பராமரிப்பேன் என்றும், பள்ளி திறந்தவுடன் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக பள்ளிக்கு அனுப்புவேன் என்றும் குழந்தையின் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த குழந்தைகள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதையும், அவர்கள் கல்வி கற்க உரிய நடவடிக்கை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிப்போம்" என்றார்.
இந்நிலையில், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பரிதா நவாப் குடும்பத்தின் வறுமையைக் கருதி உடனடி நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாயை நேரில் சந்தித்து வழங்கினார்.
மேலும், சுயதொழில் தொடங்கி நடத்த ஏதுவாக ஆவின் பெட்டிக்கடை வைத்து தரப்படும் என்றும் பரிதா நவாப் அவர்களிடம் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மளிகைக் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்!