பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஒசூர் ஆலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார். நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டுக்கு அச்சாரம் அமைத்த முக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று. மின்சார ஸ்கூட்டருக்கான தயாரிப்பு அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்ட பிறகுதான், பல முன்னணி வாகன நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தி மீது கவனத்தை திருப்பின.
பெங்களூருவில் இருந்த தொழிற்சாலை தற்போது முழுமையாக ஒசூருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஒசூர், சென்னையை தொடர்ந்து அடுத்ததாக ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஏத்தர்450 ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர ‘ஏத்தர் எனர்ஜி’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரம் பேருக்கு பயிற்சி:
ஓசூரில் 600 கோடி ரூபாய் செலவில், 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, ஏத்தர் எனர்ஜியின் பெங்களூரு ஆலையை விட 10 மடங்கு பெரிதானது. இந்த ஆலையில் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர் மட்டுமில்லாமல், லித்தியம் அயான் பேட்டரியும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இதனால் ஏத்தர் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் பேட்டரி தங்கு தடையில்லாமல் கிடைக்கும். மேலும், மின்சார வாகன தயாரிப்பு பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரம் பேருக்கு பயிற்சி கொடுக்க இந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் மின்கட்டணம்: அதிர்ச்சியின் விரக்தியில் விவசாயி தற்கொலை