கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி நீலிமா காரில் சென்று கொண்டிருந்தார். காரை முரளி என்பவர் ஓட்டினார். சானமாவு அருகே கார் வந்துகொண்டிருந்த போது எதிரே லாரியில் வந்த கூலிப்படையினர், கார் மீது லாரியை மோத விட்டனர். பின்னர் கார் மீது பெட்ரோல் குண்டுகளை தொடர்ந்து வீசினர். இதில் கார் முழுமையாக எரிந்தது. இந்த விபத்ததில் ஓட்டுநர் முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலிமாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை உத்தனப்பள்ளி காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், தொழில் போட்டி காரணமாக நீலிமாவின் உறவினரான ஓசூரை சேர்ந்த ஜெ.ஆர். என்கிற ராமமூர்த்தி கூலிப்படை உதவியுடன் இந்த இரட்டை கொலையை செய்தது தெரிய வந்தது. மேலும் கார் மீது லாரியை மோத விட்டு விபத்து போல சித்தரித்து காரில் இருந்த 2 பேரையும் உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ராமன் உள்பட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். தலைமறைவாக இருந்த ராமமூர்த்தி மட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முன் பிணை பெற்றார். அவருக்கு முன் பிணை கொடுக்கப்பட்டதை எதிர்த்து உத்தனப்பள்ளி காவல்துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நேற்று (ஜனவரி 28) விசாரித்த நீதிமன்றம் ராமமூர்த்திக்கு வழங்கிய முன் பிணையை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து உத்தனப்பள்ளி காவல்துறையினர் ராமமூர்த்தியை மீண்டும் தேடினர். அவர் ஓசூர் அருகே அத்திப்பள்ளி பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனயைடுத்து அங்கு சென்ற காவலர்கள் ராமமூர்த்தியை கைது செய்தனர்.
இந்நிலையில், ராமமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியதையடுத்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ராமமூர்த்தி சிகிச்சையில் இருப்பதால் நீதிபதி முனுசாமி மருத்துவனைக்கு சென்று 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராமமூர்த்தி குணமடைந்த பின் கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் அடைக்க உள்ளார்.