கிருஷ்ணகிரியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம், அம்மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (29-06-2020) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், ”கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வரை 110 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 62 நோயாளிகள் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 85 விழுக்காடு நோயாளிகளுக்கு அறிகுறியற்ற கரோனா தொற்று இருக்கிறது. இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை .
மாவட்டத்தில் தற்போது நோய்த் தொற்று பரவல் விகிதம் அதிகமாக இருப்பதால் அதனை மருத்துவ ரீதியாக கணக்கீடு செய்து, தேவையான அளவு தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனையிலும் படுக்கையறை கொண்ட வார்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தனியார் மருத்துவமனைகளில் 140 படுக்கைகளும், அரசு மருத்துவமனையில் 785 படுக்கை அறைகளும் தயார் நிலையில் இருக்கின்றன.
மாவட்ட எல்லைகளில், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ரயில்வே கிராசிங் பாதையில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி!