கிருஷ்ணகிரி: ஒசூர் மாநகராட்சி மின்வாரிய அலுவலகம் முன்பாக தமிழக அரசின் மின்கட்டண வரி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, மாநிலங்களவை எம்.பி., மு.தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, "இந்தியாவிலேயே முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிக்கான அந்தஸ்து பதவிகளை அனுபவித்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம். கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். முரசொலி மாறன், தயாநிதி மாறன், மு.க.அழகிரி ஆகியோர் முதலமைச்சருக்கு இனையான மத்திய அமைச்சர் பதவிகளில் இருந்தனர். தற்போது ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார்" என விமர்சித்தார்.
தொடர்ந்து, கே.பி. முனுசாமி கூறுகையில், "ஈபிஎஸ் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர், அவர் தலைமையில் இருப்பது தான் அதிமுக. அதிமுகவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நாள்வரை அனுமதிக்கப்படவில்லை இன்று அம்மாவை வைத்து அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.வாரிசு அரசியல் என்பது கட்சிக்கு தலைமை தாங்குவது என்பதுதான். பாஜகவில் அப்பா, மகன் அமைச்சராக இருக்கிறார். ஆனால், சேவை செய்வது வேறு. கருணாநிதிக்கு பின்பு மு.க.ஸ்டாலின் பின்பு அவரது மகனை உருவாக்கி வைத்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடியின் மெகா கூட்டணி வியூகம்.. கடம்பூர் ராஜூ சொன்ன ரகசியம்!