கிருஷ்ணகிரி : தர்மபுரி - கிரிஷ்ணகிரி மாவட்ட எல்லை அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விவசாயியைக் கொன்ற காட்டு யானைகள் இரண்டையும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி - தர்மபுரி மாவட்ட எல்லையில் சப்பானிப்பட்டி அருகே சஞ்சீவராயன் மலையில் முகாமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகள், அங்கிருந்து இடம் பெயர்ந்து நேற்று (மே. 6) கிருஷ்ணகிரி நகர் பகுதிக்குள் நுழைந்து தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டது. நேற்று (மே. 6) முழுவதும் ஏரியில் உற்சாக குளியல் போட்டு விளையாடிய இரண்டு காட்டு யானைகளையும் வனத் துறையினர் பட்டாசுகள் வெடித்து மீண்டும் வனத்திற்குள் விரட்டினர்.
அந்த இரண்டு யானைகள் நள்ளிரவில் மீண்டும் கிருஷ்ணகிரி நகர் பகுதிக்குள் நுழைந்தது. செல்லாண்டி நகர் கீழ் புத்தூர் ஹவுசிங் போர்டு மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், லண்டன் பேட்டை, பழைய பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் உலா வந்தது.
யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டார்ச் லைட் அடித்தும், பட்டாசுகளை வெடித்தும் யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கிருஷ்ணகிரி நகரில் உலா வந்த இரண்டு யானைகள் அதிகாலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சாமந்த மலைக் கிராமத்திற்குள் சென்றது.
அப்போது சாமந்த மலை ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்ற விவசாயி பெருமாள் (வயது 65) என்பவரை யானை தனது தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பெருமாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்போது இரண்டு யானைகளும் சாமந்த மலை ஏரிக்கரை அருகே உள்ள மாந்தோப்பில் முகாமிட்டு உள்ளது. இரண்டு காட்டு யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
இதனிடையே இரண்டு யானைகள் நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிக்குள் உலா வருவதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என்றும்; இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒலிபெருக்கி மூலமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : தருமபுரியில் நீட் தேர்வு எழுத டவுசருடன் வந்த மாணவர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!