கிருஷ்ணகிரி: வேலூரிலிருந்து ராணுவ போர் தளவாடங்களை ஏற்றுக்கொண்டு மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவத்தினர் உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில் 3 வாகனங்கள் பெங்களூரு நோக்கிச் சென்றது. வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று ராணுவ வாகனத்திற்கு இடம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராணுவத்தினர் அரசு பேருந்து நிறுத்தி பேருந்தில் ஏறி தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர் தமிழரசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் சாலையில் பேருந்து நிறுத்திவிட்டு, ராணுவ வாகனங்களுக்கு முன்பு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், ௧௦௦-க்கும் அதிகமான மக்கள் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுனரை அடித்த ராணுவ அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் ராணுவ அதிகாதிகாரிகளை சூழ்ந்துக்கொண்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால், 5-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கி எடுத்து பொதுமக்கள் பார்த்து சுட முயன்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குருபரப்பள்ளி போலீசார் உடனடியாக ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பின்னர் பொதுமக்கள் சூழ்ந்துக்கொண்டு ராணுவத்தினர் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ராணுவ அதிகாரிகளைச் சம்பவ இடத்தை விட்டு அனுப்ப முடியும் என போலிசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஒருவழியாக ராணுவ அதிகாரிகளை போலீசார், ராணுவ அதிகாரி பிரதாப்பை பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர். அதன் பிறகு, ராணுவ தளவாடங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் அனுப்பப்பட்டன.
பின்னர் காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் தமிழரசு என்பவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!