கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினந்தோறும் மது போதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழி மறித்து கலாட்டா செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்துவிட்டு போதையில் மதுபானக் கடைக்கு எதிரே உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறியுள்ளார்.
இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். இளைஞர்கள் பலர் டவர் மீது ஏற முயற்சித்தபோது மேலே ஏறி வந்தால் கீழே குதித்து விடுவதாக அந்த போதை ஆசாமி கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த மக்கள் உடனடியாக பாரூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன், டவரில் இருக்கும் முதியவரை சமாதானப்படுத்தி பேசியவாறே டவர் மீது ஏறினார்.
'குரூப்-1 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்'
ஆனால், அந்த முதியவர், காவலர்கள் மேலே வந்தால் குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பாதி தூரம் வரை சென்ற காவல் ஆய்வாளர் கபிலன் கீழே இறங்கினார். என்ன செய்வதென்று தெரியாது தவித்த காவல் துறையினர், டவரில் ஏறியிருப்பவரின், நண்பரை டவரில் ஏற வைத்தும், அவருக்கு மதுபாட்டில் கொண்டு வருவதாகக் கூறியும் சாமர்த்தியமாகப் பேசி தீயணைப்புத்துறையின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
இதன் பின்னர், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் மூன்று மணி நேரம் போக்குக் காட்டிய போதை ஆசாமியால் அரசம்பட்டியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.