நாட்டின் தலைநகர் டெல்லியிலிருந்து சென்னைக்கு பெங்களூரு, கிருஷ்ணகிரி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் மதுவிலக்கு காவல்துறையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் அருகே சந்தேகப்படும் வகையில், லாரி ஒன்று நின்றுள்ளது. இதைத் தொடர்ந்து, லாரியை சோதனை செய்ததில் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது.
லாரியின் ஓட்டுநரையும், உதவியாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், லாரியுடன் அதிலிருந்து நச்சுத்தன்மை உடைய (விஷ) எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் கூத்தேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், கோவிந்தசாமி ஆகிய இருவரும் லாரியை ஓட்டி வந்தவர்கள் எனவும், 35 லிட்டர் எடைகொண்ட 340 கேன்களில் 11 ஆயிரத்து 900 லிட்டர் அளவிலான எரிசாராயம் டெல்லியிலிருந்து சென்னைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என காவல் துறையினர் கணக்கிட்டனர். தற்போது, காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சரவணா ஸ்டோர் மேனேஜரிடம் கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ஒன்பது பேர்!